திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.83 திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) - திருக்குறுந்தொகை
பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை ஓயுமே.
1
வண்ட லம்பிய வார்சடை ஈசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே.
2
புனையு மாமலர் கொண்டு புரிசடை
நனையு மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே.
3
கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடும் இறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.
4
மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
5
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
6
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
7
அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.
8
கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே.
9
கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாதம் அணைதரத்
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com